Posted in Blog, Temples

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி என்றும் அழைக்கப்படும் திருச்சி மாநகரத்தில், பண்டைய மலை பாறைகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டை வளாகமான திருச்சி மலைக்கோட்டை (Trichy Malaikottai) மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருச்சி மலைக்கோட்டையின் கட்டமைப்பைப் பார்க்கும் போது, உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் முதல்…Continue readingதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

Posted in Blog, Temples

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

இந்திய நாடு பெரும்பாலும் கோவில்களால் நிறைந்த நாடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இங்கு காணப்படும் கோவில்களில் பல அவற்றின் துடிப்பான வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்காக உலகளவில் புகழ் பெற்றவையாக திகழ்கிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள நேர்த்தியான கோவில்களின் மிக அற்புதமான உதாரணங்களில் ஒன்றாக…Continue readingஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

திருச்சி மாநகரில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் முக்கொம்பு அணை மற்றும் கல்லணை

இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தண்ணீர் நெருக்கடி அல்லது நீர் ஆதாரங்களின் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்படுகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் குடிப்பதற்கு அல்லது பாசனத்திற்கு போதுமான சுத்தமான தண்ணீர் இல்லை. மறுபுறம், பல பகுதிகளில் திடீர் வெள்ளம் அடிக்கடி நிகழ்கிறது.

இந்த தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு நீரோடைகள் மற்றும் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரை அணைகளின் குறிப்பிடத்தக்க நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது மற்றும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் அடிப்படை பயன்பாடுகளையும் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

அணைகளின் பயன்கள்:

அணைகள் பல வகையில் நமக்கு பயன்கள் தருகின்றன. இங்கு நாம் மிகவும் பொதுவான சில பயன்கள் பற்றி பின்வருமாறு காணலாம்.

நீர்த்தேக்கங்களில் பாதுகாக்கப்படும் நீர் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் சுரங்கப் பகுதிகளுக்கு நன்னீரை வழங்குகிறது.

பாதுகாக்கப்பட்ட நீர் பாசன நோக்கங்களை பூர்த்தி செய்கிறது.

நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து ஆற்றலை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.

ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீரோட்டத்தை சீராக்க உதவுகிறது மற்றும் பள்ளத்தாக்கில் வசிக்கும் சமூகங்களைப் பாதுகாக்கிறது.

எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நீர் சேமிப்பை எளிதாக்குகிறது.

அணைகளின் நன்மைகள்:

அணைகள் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் அதன் நெருக்கடி மேலாண்மை தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு நாம் அணைகளின் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பற்றி காணலாம்.

நீர் சேமிப்பு:

இது அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் முதன்மை பயன்பாடுகளில் ஒன்றாகும். நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர் வறண்ட காலங்களில் தண்ணீர் நெருக்கடிகளை ஈடுசெய்ய உதவுகிறது. இது குடியிருப்பு, தொழில்துறை மற்றும் விவசாய நுகர்வுக்கு வழக்கமான நீர் விநியோகத்தை உறுதி செய்கிறது.

வெள்ள கட்டுப்பாடு:

வெள்ளத்தைத் தணிப்பது அணைகளின் முக்கிய நோக்கம் ஆகும். அணைகள் வெள்ளப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்த அதன் போக்கை மற்ற பயன்பாடுகளுக்குத் திருப்பி, அதிகப்படியான தண்ணீரை சேமித்து வைப்பதன் மூலமும் அல்லது எச்சரிக்கையுடன் விடுவிப்பதன் மூலமும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதையொட்டி, இது உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது மற்றும் அதனால் ஏற்படும் இடப்பெயர்ச்சி தடுக்கப்படுகிறது.

நீர்ப்பாசனம்:

அணைகளின் குறிப்பிடத்தக்க தகுதிகளில் ஒன்று நீர்ப்பாசனத்தில் அது வகிக்கும் பங்கு. பயிர்களுக்கு கணிசமாக தண்ணீர் கொடுக்கும் பிரச்சனையை சமாளிக்க அணைகள் உதவியது, இதன் விளைவாக பயிர் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி:

பல ஆண்டுகளாக, நீர் மின்சாரம் இந்தியாவின் பல பகுதிகளில் ஆற்றல் நெருக்கடியைச் சமாளிக்க ஒரு சிறந்த வழியாக உருவெடுத்துள்ளது. மேலும், சுத்தமான ஆற்றல் ஆதாரமாக இருப்பதால், நீர் மின்சாரம் எந்தவிதமான மாசுபாட்டிற்கும் பங்களிக்காது. உதாரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் நீர் மின் நிலையத்தை குறிப்பிடலாம்.

பொழுதுபோக்கு அம்சம்:

அணைகளின் நன்மைகளில் ஒன்று, அவை மனிதர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்குகின்றன. தேங்கி நிற்கும் நீரில் படகு சவாரி, குளியல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

இங்கு நாம் திருச்சிராப்பள்ளி மாநகரில் ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை மற்றும் முக்கொம்பு அணை பற்றி காணலாம்.

கல்லணை தமிழர்களின் முற்கால நீர் மேலாண்மை திட்டங்களை நமக்கு பறைசாற்றும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது. இதனை கரிகாலச்சோழ மன்னன் பெரும் கற்களை கொண்டு கட்டியுள்ளான். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த அணை மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. முக்கொம்பு அணை பிற்காலத்தில் வந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது கல்லணையில் தோற்றத்தை அடிப்படையாக கொண்டே கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைகள் சிறந்த சுற்றுலா தலங்களாகவும் விளங்குகிறது.

முக்கொம்பு அணை:

முக்கொம்பு என்றால் தமிழில் ‘மூன்று கிளைகள்’ என்று பொருள். இந்த (mukkombu dam in trichy) அணை திருச்சி மாநகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 1836 மற்றும் 1838 ஆம் ஆண்டுக்கு இடையில் சர் ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட இந்த அணை 685 மீட்டர் நீளமானது. இது அணை மேல் கட்டில் மூன்று சேனல்களாக உடைந்து ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகிறது, இது தஞ்சாவூர் டெல்டா (தஞ்சை) இடையே அமைந்துள்ளது. அணை மட்டுமல்ல, முக்கொம்பு திருச்சியின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்

“அப்பர் அணைக்கட்டு” (upper anaicut in trichy) என்று சிறப்பிக்கப்படும் முக்கொம்பு சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருச்சி மாநகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் விடுமுறை நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க இங்கு வருகை தருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்பதையும். மகிழ்ச்சியாக உலா வருவதையும் காண முடியும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நிறைய சிறு சிறு கடைகள் மற்றும் கேன்டீன்கள் உள்ளன. இந்த கடைகளில் சூடாக வேகவைத்த நிலக்கடலை, சிற்றுண்டி வகைகள், மாங்காய் துண்டுகள், பழ வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை கிடைக்கின்றன. பள்ளி குழந்தைகளை ஒரு நாள் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இது சிறந்த இடமாக இருக்கிறது.

முக்கொம்பு அணை மீன்பிடிக்க ஒரு சிறந்த இடமாகவும் விளங்குகிறது. இங்கு நீங்கள் பல வகையான மீன்களைக் காணலாம். நீங்கள் முக்கொம்புக்குச் செல்கிறீர்கள் என்றால், அங்கு கிடைக்கும் பிரெஷான மீன்களை வாங்கி உங்கள் உணவோடு சேர்த்து உண்டு மகிழலாம். இங்கு மீனவர்கள் மீன் பிடித்து, குறைந்த விலையில் அந்த இடத்திலேயே அதனை சமைத்து விற்கிறார்கள்.

குழந்தைகள், குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் திருச்சியில் சுற்றுலா செல்ல முக்கொம்பு ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள ஸ்ரீரங்கம், கொள்ளிடம் பாலம், கல்லணை, பட்டாம்பூச்சி பூங்கா, ராக்ஃபோர்ட் கோயில் போன்ற இடங்களையும் சுற்றி பார்த்து மகிழலாம்.

முக்கொம்பு அமைவிடம் (location of mukkombu dam) :

திருச்சிராப்பள்ளி மாநகரில் இருந்து வடமேற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே அமையப்பெற்றுள்ளது முக்கொம்பு அணை. இங்கு செல்ல திருச்சியில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறி பயணித்தும், இந்த மார்க்கமாக செல்லும் ரயிலில் பயணித்தும் இளமானூர் என்ற இடத்தில் இறங்கி செல்லலாம். சொந்த வாகனங்களில் வருவோர் ஸ்ரீரங்கம், ஜீயபுரம் வழியாகவும் சென்றடையலாம்.

கரிகால் சோழன் கட்டிய கல்லணை.

உலகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அணை என்ற சிறப்பை பெறுகிறது திருச்சிராப்பள்ளி அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள “கல்லணை”. இது நம் தமிழர்களின் நீர் மேலாண்மை திட்டத்துக்கு தகுந்த சான்றாக இன்று வரை விளங்குகிறது. இந்த (kallanai in trichy) அணையை முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரிகால் சோழன் என்னும் மன்னன் கட்டியதாக வரலாறு சிறப்பித்து கூறுகிறது. இந்த கல்லணையானது காவிரி ஆற்றின் குறுக்கே மணலில் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லணையில் பயன்படுத்தப்பட்டுள்ள பழங்கால தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை பலராலும் வியந்து பேசப்படுகிறது. வெறும் கல்லும், தண்ணீரில் கரையாத ஒருவகை களிமண்ணும் மட்டுமே கலந்து இந்த அணையானது சுமார் 1080 அடி நீளம், 66 அடி அகலம், 18 அடி உயரம் என்ற அளவில் வளைந்து நெளிந்த அமைப்புடன் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளபெருக்கையும் தாங்கிக்கொண்டு இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த கல்லணை.

முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதி சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த போது, கரிகால் சோழன் என்னும் மன்னன் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலத்தில் தண்ணீர் கரைபுரண்டு வீணாக ஓடுவதையும், அதனால் தனது மக்கள் படும் துயரையும் கண்டு இந்த கல்லணையை கட்டினான் என வரலாறு கூறுகிறது. கரிகால் சோழ மன்னன் இந்த அணையை கட்டியதற்கு பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை என்னும் தமிழ் பாடல் நூல்களும், தெலுங்கு சோழர் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டு செப்பேடுகளும் சான்றாக விளங்குகின்றன. இந்த கல்லணை ஆங்கிலத்தில் “கிராண்ட் அணைகட்டு” (GRAND ANAICUT in trichy) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கல்லணையில் இருந்து தான் காவிரி ஆறு உள்ளாறு, வெண்ணாறு, காவிரி ஆறு, புது ஆறு என்னும் நான்கு பிரிவுகளாக பிரிந்து பாய்கிறது. இந்த அணைக்கட்டு கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவிரி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது அதில் கரைபுரண்டு வரும் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடுவதற்கும், வெள்ளம் ஏற்படாத காலத்தில் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து சேமித்து வைப்பதும் ஆகும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது மற்றும் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளை கடந்தும் அதன் கம்பீரம் குறையாமல் நிற்கும் கல்லணையை கட்டிய கரிகால் சோழ மன்னனை சிறப்பிக்கும் வகையில் கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாக செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் மணி மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தில் கரிகால் சோழன் யானை மீது அமர்ந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கும் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகளை பெற்ற கல்லணை தற்போது திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. உள்ளூர் மக்கள் முதல் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு வரை அனைத்து மக்களும் கல்லணையை பார்வையிட வருடம் முழுவதும் வந்து செல்கிறார்கள்.

கல்லணை அமைவிடம் (location of kallanai in trichy):

திருச்சி மாநகரத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள கல்லணைக்கு செல்ல திருச்சி மாநகரில் இருந்து அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் அதிகளவில் உள்ளன. மேலும் திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ஆகிய இடங்களில் இருந்து தனியார் வாடகை வாகனங்களையும் அமர்த்தி எளிதாக சென்று வரலாம்.

Leave a Reply