திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
திருச்சிராப்பள்ளி என்றும் அழைக்கப்படும் திருச்சி மாநகரத்தில், பண்டைய மலை பாறைகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டை வளாகமான திருச்சி மலைக்கோட்டை (Trichy Malaikottai) மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருச்சி மலைக்கோட்டையின் கட்டமைப்பைப் பார்க்கும் போது, உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் முதல் விஷயம் பழங்கால கட்டிடக்கலை ஆகும். இந்த அற்புதமான இடத்தின் சிறப்பானது மற்ற கோவில்களை விட வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட பரந்த பார்வையிலிருந்து தொடங்குகிறது. நீங்கள் மலையில் ஏறும் போது சுற்றியுள்ள இடத்தின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். தரை மட்டத்தில் இருந்து கோவிலின் உயரம் சுமார் 83 மீட்டர் (272 அடி) இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மலைக்கோட்டை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாறையின் மீது அமையப்பெற்றுள்ளது.
திருச்சி மலைக்கோட்டையில் மூன்று தளங்களில் கோவிலானது அமையப்பெற்றுள்ளது. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவிலும், மலையின் மத்திப்பகுதியில் மட்டுவார்குழலி உடனுறை தாயுமானசுவாமி கோவிலும், மலையின் உச்சிப்பகுதியில் உச்சி பிள்ளையார் கோவிலும் காணப்படுகிறது. இந்த மூன்று திருக்கோவில்களுமே மிகவும் பிரசித்திபெற்ற பழம் பெருமை வாய்ந்த திருக்கோவில்கள் ஆகும்.
திருச்சி மலைக்கோட்டையின் வரலாறு (Trichy Rockfort History):
திருச்சி மலைக்கோட்டை முற்காலத்தில் இராணுவ கோட்டையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இரண்டு முறை கட்டப்பட்டது, முதலில் விஜயநகர பேரரசும் பின்னர் பிரிட்டிஷ் பேரரசும் கர்நாடகப் போர்களின் போது இதனை விரிவு படுத்தி கட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த விவரங்கள் குறைவான ஆய்வுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் புரிந்துகொள்ளப்படுகின்றன, ஆனால் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கோட்டையின் ஆரம்பகால வாழ்க்கை பெரும்பாலும் போர் மற்றும் படையெடுப்பைச் சுற்றி இருந்தது, ஆனால் சமீபத்திய காலங்களில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த கோட்டை நன்கு பராமரிக்கப்படுகிறது. இது ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் வழிபாட்டு ஸ்தலமாக விளங்கி வருகிறது.
கட்டிடக்கலை மற்றும் சிறப்புகள்(Trichy Rockfort Temple Architecture):
இந்த கோட்டை பற்றிய கட்டடக்கலை உண்மைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, ஏனெனில் இது உலகின் பழமையான உருவாக்கம் என்று நம்பப்படுகிறது. இது சுமார் 3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது, இது கிரீன்லாந்தில் உள்ள பாறைகளுக்கு சமம் மற்றும் இமயமலையை விட ஓரளவு பழமையானது என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இங்கு காணப்படும் குவார்ட்ஸ் ஃபெல்ட்ஸ்பார், கண்ணாடி தயாரித்தல் மற்றும் மட்பாண்டங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற பாறை உருவாக்கம், நிறைய கலை உருவாக்கத்திற்கு பங்களிக்கிறது.
மலைகோட்டை மீது ஏறி செல்லும் வகையில் பழங்கால கைவினைஞர்களால் கற்களில் நடைமுறையில் இருந்த பாறை வெட்டும் நுட்பங்களால் 344 படிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து துவங்கும் இந்த படிகள், மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வரை செல்கிறது.
பழங்கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த மலைக்கோட்டை மீது வீடுகளும் அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இத்தனை பாரம்பரிய பெருமை மிக்க மலைக்கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், இங்குள்ள திருக்கோயில்களை தரிசிக்க எண்ணற்ற பக்தர்களும் தினம்தோறும் வருகை தருகிறார்கள். திருச்சி மாநகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் இந்த மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து பார்த்தால் மாநகரின் மொத்த அழகும், அரங்கநாத சுவாமி கோவில், திருவானைக்கோவில் மற்றும் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கவின்மிகு காட்சியும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். அதிலும் இரவு பொழுதில் மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது மின்னொளியில் மேலும் அழகாக மாநகரம் முழுவதும் காட்சியளிக்கும்.
மலைக்கோட்டை கோவில்கள்(Trichy Rockfort Temples):
மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், மலைக்கோட்டையின் மத்திய பகுதியில் தாயுமானவசுவாமி கோவில் மற்றும் மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவில் என மூன்று பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.
மாணிக்க விநாயகர் கோவில் (Trichy Malaikottai Manicka vinayagar Temple):
மாணிக்க விநாயகர் கோவில் மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள முதல் கோவில் ஆகும். இது மலையின் வெளிப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மாணிக்க விநாயகர் தான் திருச்சி மாநகரத்தின் முக்கிய தெய்வம் என்று கூறப்படுகிறது. இந்த கோவில் முதலில் பல்லவர்களால் அமைக்கப்பட்டு பின்னர் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோவிலில் உள்ள விசாலமான மண்டபத்தில் பல்வேறு இறைத்திருமேனிகளின் படங்களும், வேலைப்பாடுகளுடன் கூடிய விநாயகரின் வெவ்வேறு வடிவ சுதை சிற்பங்களும் அமையப்பெற்றுள்ளன. மலைக்கோட்டை மீது ஏற துவங்கும் முன்னர் இந்த மாணிக்க விநாயகரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
தாயுமானவ சுவாமி (சிவன்) கோவில் (Tiruchirapalli Rockfort Thayumanava samy Temple):
மட்டுவார்குழலி உடனுறை தாயுமானவசுவாமி திருக்கோவில் மலைக்கோட்டையின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. சிவபெருமான் மீது உண்மையான பக்தி கொண்டிருந்த ரத்னாவதி என்ற கர்ப்பிணிப் பெண், பிரசவத்தின் போது தனது தாய் இருக்க வேண்டும் என்று விரும்பியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால் காவேரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு வந்ததால் அவளுடைய தாயால் சரியான நேரத்தில் வர முடியவில்லை. இதனால் தனது பக்தையை காக்கும் பொருட்டு அவளுடைய தாயின் வடிவத்தை சிவபெருமான் எடுத்து, அவளுக்கு சுகப்பிரசவத்திற்கு உதவியதாக கூறப்படுகிறது. பின்னர் பிரசவ காலம் முடிந்து அவளுடைய தாயார் பின்னர் வந்து சேர்ந்த போது, ரத்னாவதி தனக்கு ஒரு தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியது சிவபெருமான் என்பதை உணர்ந்தாள். தனது பக்தைக்காக தாயும் ஆகி வந்ததால், இங்கு பெருமான் தாயுமானவ சாமி என்ற பெயர் தாங்கி காட்சியளிப்பதாக இத்தல வரலாறு கூறப்படுகிறது.
இந்த கோவில் பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் -1 என்பவரால் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, இங்கு சிவபெருமான் பெரிய லிங்க திருமேனியராகவும், அவரது துணைவியார் பார்வதி – மட்டுவார் குழலம்மை என்ற பெயரிலும் வழிபடப்படுகிறார்கள்.. இந்த கோவில் விஜயநகர ஆட்சியாளர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களால் பிற்காலத்தில் மேலும் புனரமைக்கப்பட்டது. இந்த கோவிலின் வருடாந்திர உற்சவம் சித்திரை மாதம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இங்கு சுவாமி சன்னதி மேற்கு திசை நோக்கியும், திருக்கோவில் வாயில், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கிழக்கு திசை நோக்கியும் அமையப்பெற்றிருக்கும். இந்த கோவிலின் சுவாமி மீது தேவார பாடல்கள் பாடப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உச்சி பிள்ளையார் கோவில் (Trichy Uchi pillayar Temple):
மலைக்கோட்டையின் உச்சியின் மீது அமையப்பெற்றுள்ளது உச்சி பிள்ளையார் திருக்கோவில். இந்த கோவில் சுமார் 273 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளதால், இந்த உச்சத்தை அடைய சுமார் 344 படிகளுக்கு மேல் ஏற வேண்டி இருக்கும். இந்த படிகளில் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும், இங்கு வீசும் இனிமையான குளிர்ந்த காற்று அதிக அழுத்தமின்றி ஏற உதவும் வகையில் நமது ஆற்றலை அதிகரிக்கிறது. உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து முழு திருச்சி மாநகரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலின் அழகிய பரந்த காட்சியை காண முடியும். இந்த உச்சி பிள்ளையாருக்கு தினமும் ஆறு கால பூஜையும், மாதம் தோறும் சங்கடகர சதுர்த்தி வழிபாடும் சிறப்பாக நடைபெறும். மேலும் இங்கு நடைபெறும் வருடாந்திர உற்சவமான விநாயகர் சதுர்த்தி அன்று ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படுவதும் இந்த கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
மலைக்கோட்டை சிறப்புகள்:
இந்த மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி மீது தேவாரத்தில் திருஞானசம்பந்த பெருமான் பதினொரு பாடல்களும், அப்பர் பெருமான் நான்கு பாடல்களும், மற்றும் திருவாசகத்தில் மாணிக்கவாசக பெருமான் இரண்டு பாடல்களுமாக பாடியுள்ளனர்.
சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையை போலவே இந்த சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகளாக அமையப்பெற்றுள்ளதால் இதற்கு தக்ஷிணகைலாயம் என்ற பெயர் வழங்கப்பெறுகிறது.
இந்த மலைக்கோட்டை கோவிலை கிழக்கு திசையில் இருந்து காணும் போது பிள்ளையார் போலவும், மேற்கு திசையில் இருந்து காணும் போது சிவலிங்கம் போலவும், தெற்கு திசையில் இருந்து காணும் போது நந்தி உட்கார்ந்து இருப்பது போலவும், வடக்கு திசையில் இருந்து காணும் போது தொகையை விரித்து ஆடும் மயில் போலவும் காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்தபடி கீழே பார்க்கும் போது, படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.
முற்காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட போரின் போது இந்த மலைக்கோட்டையானது வெடி மருந்து கூடாரமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகள் மிக்க திருச்சி மலைக்கோட்டையை அனைவரும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு ரசிக்க வேண்டும். மலைக்கோட்டை திருச்சி மாநகரத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு சிரமமின்றி எளிதாக சென்றடைந்து விடலாம்.