திருச்சியில் உள்ள அருங்காட்சியகங்கள்
அருங்காட்சியகம் (museums in trichy) என்பது அறிவியல், கலை, கலாச்சாரம் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் தொகுப்பை கவனித்து, நிரந்தர அல்லது தற்காலிகமான கண்காட்சிகள் மூலம் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கச் செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். பெரும்பாலான பெரிய அருங்காட்சியகங்கள் உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன, மேலும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கூட உள்ளூர் அருங்காட்சியகங்கள் உள்ளன. இது ஒரு இலாப நோக்கற்ற முறையில் செயல்படும் சமூக சேவை நிறுவனமாகும். பெரும்பாலான அருங்காட்சியகங்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு சிறந்த அலுவலர்களை நியமித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் ரயில்வே அருங்காட்சியகம் பற்றி சுருக்கமாக காணலாம்.
திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (government museum in trichy):
திருச்சிராப்பள்ளியில் அமையப்பெற்றுள்ள அரசு அருங்காட்சியகம் மிகவும் பாரம்பரிய பெருமை பெற்றதாகும். இது திருச்சியில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் சூப்பர் பஜார் அருகில் உள்ள ராணி மங்கம்மாள் மஹாலில் அமைந்துள்ளது.
அருங்காட்சியகத்தின் வரலாறு:
ராணி மங்கம்மாள் மஹால் மதுரையின் அப்போதைய ஆட்சியாளர் சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது.1616 முதல் 1634 வரை நாயக்கர் ஆட்சி காலத்தில் திருச்சிராப்பள்ளி தலைநகராக இருந்த போது, மதுரை நாயக்கர்களின் தர்பார் மண்டபம் என்றும் அழைக்கப்பட்டது. மதுரை மற்றும் சேலம் அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக இந்த அரசு அருங்காட்சியகம் 1983 இல் தமிழக அரசால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையின் படி திருச்சியில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1988 இல் ராணி மங்கம்மாள் தர்பார் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகம் தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தில் காணப்படுபவை:
இந்த அருங்காட்சியகத்தில் புவியியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டு மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 2000 பொருட்களின் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகள் உள்ளன. மெகாலிதிக் சிற்பங்கள், இசைக்கருவிகள், மற்றைய கருவிகள், செதுக்கல்கள், கற்காலக் கல்வெட்டுகள், பழைய நாணயங்கள், சோழர் கால நாணயங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அரிய ஆவணங்கள், பனையோலை கையெழுத்துப் பிரதிகள், புதைபடிவங்கள், பச்சைமலை & கொல்லிமலை பழங்குடி மக்கள் வாழ்க்கை போன்ற சில உட்புறக் கண்காட்சிகள் உள்ளன. மேலும் இங்கு முகலாய மன்னன் ஹைதர் அலி பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கிகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப நாட்களில் எடுக்கப்பட்ட BHEL நிறுவனம், ஸ்ரீரங்கம் கோவில், மலைக்கோட்டை கோயில் புகைபோடங்களும் இங்கு கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சிற்பப் பூங்காவில் உள்ள கல் சிலைகள் வெளிப்புறக் காட்சிகளை உருவாக்குகின்றன. இந்த பூங்காவில் 17 ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு சுமார் 45 இந்து தெய்வங்கள் மற்றும் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்கள், பலிபீடம், கல் நந்திகள் மற்றும் லிங்கங்கள் உட்பட நிறைய சிறப்ங்கள் காணப்படுகிறது. தஞ்சாவூர் ஓவியங்களில் இருந்து பல அரிய வகை சிற்பங்கள் வரை இங்கு காட்சி அளிக்கிறது. மேலும் துர்கா தேவி, மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மற்றும் நடராஜ பெருமான் ஆகியோரின் பழமையான சிற்பங்களையும் காணலாம். இந்த அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் பிரிவும் உள்ளது, அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய வகை பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றையும் நாம் காண முடியும்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான விஷயங்களை பார்வையிட கல்வி சுற்றுலாவாக நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இங்கு வரும் மாணவர்களுக்கு இங்குள்ள பழமையான பொருட்களை பற்றி கற்பிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
அருங்காட்சியகம் செயல்படும் நேரம்:
இந்த அரசு அருங்காட்சியகம் வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
அமைவிடம்:
இந்த அருங்காட்சியகம் மலைக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவிலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், திருச்சி ரயில்வே சந்திப்பில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
முகவரி:
அரசு அருங்காட்சியகம்.
சிங்காரதோப்பு,
தேவதானம்,
திருச்சிராப்பள்ளி – 620002
திருச்சிராப்பள்ளி ரயில்வே அருங்காட்சியகம்.
திருச்சிராப்பள்ளி மாநகரில் அமையப்பெற்றுள்ள ரயில்வே அருங்காட்சியகம் (railway museum in trichy) என்பது பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் ரயில்வே சம்மந்தமான கண்காட்சிக்கான இடமாக விளங்குகிறது. சுமார் 1.35 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் அமைக்கப்பட்ட ரயில்வே அருங்காட்சியகம் 18 பிப்ரவரி 2014 அன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு. ராகேஷ் மிஸ்ராவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் முந்தைய தென்னிந்திய ரயில்வேயின் 150 வது செஸ்கிவிசென்டேனியல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அர்பணிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பழைய தென்னிந்திய ரயில்வேயின் வளமான பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது.
30.06.2011 அன்று அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அசல் திட்டத்தின்படி, இது இரண்டு மெமோரியல் கட்டிடங்களாக அமைக்கப்பட்டது. முதல் கட்டத்திற்கான (தரை தளம்) கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 18.02.2014 அன்று GM/SR ஆல் திறந்து வைக்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையால், உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால், அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்குத் திறக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. பார்வையாளர்களுக்கு உட்புற கண்காட்சிகளைக் காண்பிப்பதற்காக, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆரம்ப வேலைகள் ஜனவரி 2015 இல் முடிக்கப்பட்டு இறுதியாக 25.02.2015 அன்று பார்வையாளர்களுக்காக இந்த அருங்காட்சியகம் முழுமையாக திறக்கப்பட்டது. இப்போது அது அந்த பாதை வழியாக நடந்து செல்வோரை கூட ஈர்க்கும் இடமாக திகழ்கிறது.
முன்னாள் தென்னிந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருக்கும் அருங்காட்சியகம் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளைக் கொண்டுள்ளது. உட்புற கண்காட்சிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு ஆவணங்களைக் காட்டுகின்றன. இங்கு அரிய புகைப்படத் தொகுப்புகள், வரைபடங்கள், கெஜட்டுகள், ரயில்வே கையேடுகள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை நினைவூட்டும் தென்னிந்திய ரயில்வே வரலாற்றின் சுவாரஸ்யமான நினைவுச்சின்னங்கள் உள்ளன. பழைய லோகோ என்ஜின் மற்றும் பழைய மோட்டார் கார் ஆகியவை அருங்காட்சியகத்தில் பார்க்க தகுந்த இரண்டு விஷயங்கள் ஆகும். வெளிப்புற கண்காட்சிகளில் ஒரு சில விண்டேஜ் நீராவி என்ஜின்கள் உள்ளன. ஒரு முழுமையான செயல்பாட்டு பொம்மை ரயிலும் இந்த வளாகத்தில் இயங்குகிறது. இந்த பொம்மை ரயிலில் பயணம் செய்வதும் மிக சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
இந்த ரயில் அருங்காட்சியகம் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து கல்வி சுற்றுலாவாக வரும் மாணவர்களுக்கும், குடும்பமாக சுற்றி பார்க்க வரும் மக்களுக்கும் ஏற்ற இடமாக விளங்குகிறது. விடுமுறை நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அதிகளவு மக்கள் வருகை தருகிறார்கள். ரயில் அருங்காட்சியகம் பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 ரூபாயும், குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 10 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றிப்பார்த்து ஆராய 3 மணிநேரம் வரை ஆகும். எனவே ரயில் அருங்காட்சியகம் திருச்சியில் நேரத்தை செலவிட மக்கள் வருகை தரும் சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
முகவரி:
ரயில்வே மியூசியம்.
பாரதியார் சாலை,
கன்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி – 620001.
அண்ணா அறிவியல் மையம்:
திருச்சிராப்பள்ளி மாநகரில் அமையப்பெற்றுள்ள அண்ணா அறிவியல் மையத்தில் (anna science centre in trichy) 11 க்கும் மேற்பட்ட காட்சியகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இயற்கை, கிரகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பண்புகளை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. இங்கு சுற்றுச்சூழல் கேலரி காடுகளின் தாவரங்கள் மற்றும் அதன் பல்லுயிரியலை சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு கண்காட்சிகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அரங்குகளை நடத்துகிறார்கள். நகரத்தில் அறிவு மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும் கோளரங்கம் இங்கு சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த அறிவியல் மையம் புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்ட மாணவர்களை அதிகளவு கவர்ந்து இழுக்கிறது. இந்த மாவட்டங்களில் பல மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக இங்கு அடிக்கடி வருகை தருகிறார்கள்.
சிறப்புக்கள்:
3 டி அறிவியல் தியேட்டர்,
ஆய்வகங்கள்,
செயல்பாட்டு காட்சி தொகுப்பு,
கோளரங்கம்,
கண்காட்சிகள்,
சிறப்பு நிகழ்ச்சிகள்,
பூங்காக்கள்.
முகவரி:
அண்ணா அறிவியல் மையம்
விமான நிலையம் அருகில்,
கே கே நகர்,
திருச்சிராப்பள்ளி – 620007.