திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா.
மனதை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா:
திருச்சி மாநகரில் உள்ள சிறந்த பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்வது (Trichy Butterfly Park) வண்ணத்துப்பூச்சி பூங்கா. இது வண்ணத்துப்பூச்சிகளுக்கு மட்டும் அன்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு இடமாக விளங்குகிறது. இந்த பூங்காவில் பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகளை நாம் கண்டு ரசிக்க முடியும்.
இங்கு கிரிம்சன் ரோஸ் வகை, காமன் ரோஸ் வகை, மயில், மஞ்சள், வரி ஆமணக்கு சிறகன் வகை, பிளைன் டைகர் வகை, ப்ளூ டைகர் வகை, ஸ்ட்ரைப்ட் டைகர் வகை, சாக்லேட் வண்ண வகை, நீல வசீகரன் வகை, செவ்வந்தி சிறகன் போன்ற அரியவகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட இன்னும் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்ந்து வருவதை நாம் காண முடியும்.
அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு வண்ணத்து பூச்சி இனங்களை பாதுகாக்கும் பொருட்டு 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவை அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு தொடங்கி வைத்தார். இதற்காக ஏறத்தாழ 25 ஏக்கரில் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 8.68 கோடி மதிப்பீட்டில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது.
வண்ணத்துப்பூச்சி பூங்காவின் நோக்கம்:
அழிந்து வரும் வண்ணத்து பூச்சி இனங்களை பாதுகாக்கவும், அதன் இனத்தை பெருக்கவும் இதுபோன்ற வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் தேவை என்ற அடிப்படையில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது . வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல், ஆகிய செயல்களுக்கு ஒவ்வொரு வகையான தாவரத்தை தேர்வு செய்யும். அந்த வகையில் இந்த பூங்காவில் சின்யா, பென்டாஸ், டிரைக்ட்ரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வண்ணத்து பூச்சிகளுக்கு பிடித்தமான செடிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
வண்ணத்துப்பூச்சி பூங்காவின் சிறப்பம்சங்கள்:
தாவரங்களில் உள்ள மென்மையான இலைகளை உண்டு தான் வண்ணத்து பூச்சிகள் உயிர் வாழ்கின்றன. எனவே அதற்கென சிறப்பான முறையில் காட்டாமணக்கு செடிகளும் வளர்க்கப்படுகின்றன. மேலும் இங்கு கொய்யா, எலுமிச்சை, கருவேப்பிலை போன்ற மரக்கன்றுகளும் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காவில் தொடக்கத்தில் சுமார் 38 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருந்தன. தற்போது மேலும் சில வகை வண்ணத்துப்பூச்சிகள் வந்துள்ள நிலையில் சுமார் 45 வகையான வண்ணத்துப்பூச்சிகளை இங்கு காணலாம். இவற்றுள் 20 வகையான வண்ணத்துப்பூச்சிகள் குறிப்பிட்ட பூக்கள், தாவர வகையை சேர்ந்த இலைகள், அதில் உள்ள மகரந்த சேர்க்கை போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான ஈரப்பத அளவை தொடர்ந்து குறிப்பிட்ட அளவில் பராமரிக்கும் பொருட்டு மூன்று இடங்களில் செயற்கை நீரூற்றுகள், குளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பநிலையை கட்டுப்படுத்தி தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள இவை உதவியாக இருக்கிறது. இது தவிர இந்த பூங்காவில் வளர்க்கப்படும் செடிகள், மரங்கள் மற்றும் தாவர வகைகள் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம் நீர் தெளிப்பான் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சின்யா, உன்னிச்செடி, பெருந்தேள் கொடுக்கு போன்ற தாவர வகைச்செடிகளில் அதிகளவில் வண்ணத்துப்பூச்சிகள் குமிந்திருப்பதை பார்க்கலாம். கொய்யா, சீதாப்பழ இல்லை, மூங்கில் மர இலை போன்றவற்றையும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் பயன்படுத்துவதால் இந்த வகை தாவரங்களும் இங்கு அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
இதுதவிர ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் பூக்கும் வகையிலான பூச்செடிகள் இங்கு உள்ளது. அவற்றுள் மழை பெய்தவுடன் அடுத்த நாளில் அதிகளவில் பூக்கக்கூடிய நிக்கோடிடியா போன்ற செடி வகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக எல்லா மாதங்களிலும் பூக்கள் பூக்கும் வகையில் தாவரங்கள் இருப்பதால், வண்ணத்துப்பூச்சிகள் தடையில்லாமல் தேன் குடிப்பதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது.
இந்த பூங்காவுக்கு (Butterfly Park Trichy) வரும் சுற்றுலா பயணிகள் வண்ணத்துப்பூச்சிகளை பற்றி அறிந்து கொள்வதுடன், இங்குள்ள பல்வேறு விதமான பொழுது போக்கு அம்சங்களையும் அனுபவிக்கலாம். பூங்காவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வாயில் அனைவரையும் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயிலின் உள்ளே நுழைந்தால் நீர் சல சலத்து விழும் ஓசை நம் காதுகளில் கேட்கிறது. இந்த நுழைவாயிலின் பின் புறம் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியும், அதன் அருகே வட்டவடிவ மேசையில் இரும்பில் வடிவமைக்கப்பட்ட பெரிய செயற்கை வண்ணத்துப்பூச்சி உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய விளக்கப்படம், புதிய வடிவிலான குகை நடை பாதை, தொங்கும் பாலம் அமைப்பு, செயற்கை புல்வெளி, குழந்தைகள் விளையாடும் இடம், மலை வாழ் மக்கள் வாழும் செயற்கை குடிசைகள் அமைப்பு, குடில்கள், உட்கார்வதற்கான கல் பலகைகள் ஆகியவை இங்குள்ள சிறப்பம்சங்கள் ஆகும். இதுதவிர இங்கு வண்ணத்து பூச்சிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒன்றரை ஏக்கரில், அதற்குரிய வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள உள் அரங்கும் உள்ளது. இந்த அரங்கம் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான குளிர்ச்சியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கத்திற்குள்ளும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான தாவரங்கள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சூழலை விளக்கும் அரங்கு:
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சூழல் எப்படி உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சி அரங்கம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு புழுக்களில் இருந்து வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்கம் செய்து உருவாகும் வரையிலான படி நிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியில் இருந்து தாவரங்களை வாங்காமல், பூங்கா வளாகத்திலேயே நர்சரி உருவாக்கப்பட்டு பல்வேறு வகையான தாவர வகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழை மற்றும் வெப்பநிலையைக் கண்டறியும் வகையிலான கருவியும் பொருத்தப்பட்டு வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர வனம்:
இந்த பூங்காவுக்குள் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பன்னிரண்டு ராசிகளுக்கு உரிய மரங்களும். இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்குரிய மரங்களும் கொண்ட ஒரு வனம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த ராசிக்குரிய மரம் மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களில் அதன் பெயர்களும், தாவரவியல் பெயர் போன்றவையும் குறிக்கப்பட்டுள்ளது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவருகிறது.
பன்னிரெண்டு ராசிகளும் அதற்குரிய மரங்களும்:
- மேஷம் – செஞ்சந்தனம் மரம்
- ரிஷபம் – அத்தி மரம்
- மிதுனம் – பலா மரம்
- கடகம் – புரசு மரம்
- சிம்மம் – குங்குமப்பூ மரம்
- கன்னி – மா மரம்
- துலாம் – மகிழ மரம்
- விருச்சிகம் – கருங்காலி மரம்
- தனுசு – அரச மரம்
- மகரம் – ஈட்டி மரம்
- கும்பம் – வன்னி மரம்
- மீனம் – புன்னை மரம்
இருபத்தேழு நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும்:
- அசுபதி – ஈட்டி மரம்
- பரணி – நெல்லி மரம்
- கார்த்திகை – அத்திமரம்
- ரோகிணி – நாவல்மரம்
- மிருகசீரிடம் – கருங்காலி மரம்
- திருவாதிரை – செங்கருங்காலி மரம்
- புனர்பூசம் – மூங்கில் மரம்
- பூசம் – அரசமரம்
- ஆயில்யம் – புன்னை மரம்
- மகம் – ஆலமரம்
- பூரம் – பலா மரம்
- உத்திரம் – அலரி மரம்
- அஸ்தம் – அத்தி மரம்
- சித்திரை – வில்வ மரம்
- சுவாதி – மருத மரம்
- விசாகம் – விலா மரம்
- அனுஷம் – மகிழ மரம்
- கேட்டை – பராய் மரம்
- மூலம் – மராமரம்
- பூராடம் – வஞ்சி மரம்
- உத்திராடம் – பலா மரம்
- திருவோணம் – எருக்க மரம்
- அவிட்டம் – வன்னி மரம்
- சதயம் – கடம்பு மரம்
- பூரட்டாதி – தேமமரம்
- உத்திரட்டாதி – வேம்பு மரம்
- ரேவதி – இலுப்பை மரம்
வண்ணத்துப்பூச்சிகளின் பிரம்மாண்ட மாதிரிகள்:
இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சி வகைகளின் குறிப்பிட்ட வகையைத் தேர்வு செய்து, அவற்றின் பெரிய மாதிரிகள் வளாகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் கவரும் விதத்தில் உள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா (Butterfly park in trichy) முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமான ஸ்ரீரங்கம் அருகில் அமைந்துள்ளதால் இங்கு வருடத்தில் அனைத்து நாட்களும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பூங்கா காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே தீவு போல அமையப்பெற்றுள்ளதால் அதன் அழகை ரசிக்க எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள் என்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அடுத்தடுத்து சுற்றிப்பார்க்கும் விதத்தில் அருகே கல்லணை மற்றும் முக்கொம்பு அணைகளும், முக்கிய பல கோவில்களும் அமையப்பெற்றுள்ளது. இந்த பூங்கா மாணவர்கள் கல்வி சுற்றுலா வரவும், திருச்சி வாழ் மக்கள் பொழுது போக்கு சுற்றுலா வரவும் தகுந்த இடமாக விளங்குகிறது.
பூங்கா செயல்படும் நேரம்:
வண்ணத்துப்பூச்சி பூங்கா (Opening Timings of Butterfly park in Trichy) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும். செவ்வாய்க்கிழமை அன்று வார விடுமுறை ஆகும்.
பூங்கா நுழைவு கட்டணம்:
வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சிறியவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கல்வி சுற்றுலாவிற்காக வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆய்விற்காக வரும் கல்லூரி மாணவர்களுக்கு சீருடை அணிந்து வரும் போதும், அடையாள அட்டை வைத்திருக்கும் போதும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இது தவிர போட்டோ ஷூட் மேற்கொள்ள 500 ரூபாய் கட்டணமும், வீடியோ கேமராவிற்கு 1000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. (குறிப்பு: கட்டணங்கள் மாறுதலுக்கு உட்பட்டது)
வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைவிடம்:
திருச்சிராப்பள்ளி மாநகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீரங்கத்தை அடுத்த தீவு பகுதியான மேலூர் நடுக்கரையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமையப்பெற்றுள்ளது.